Wednesday, July 7, 2010

வயிற்றினுள் ஒரு இதயம்

உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.

கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்
அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.

இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.

ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்
என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான்.

இந்திராவின் கிறுக்கல்கள்

Wednesday, June 9, 2010

காதல் போர்

விழிக்கும் மொழிக்குமான
போரில்
உதிர்கின்றன
ஊனமான கவிதைகள்...

- கிஷோர்

கவிவலம்

Thursday, March 25, 2010

ரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை!

அன்பே
என்ன ஆச்சர்யம்
இன்பமான இரவு வரும் போதெல்லாம்
அந்த இனிய உணர்வும்
கூடவே வருகிறதே

வைகறையின் வசந்தத்தில்
வராத அந்த உணர்வு
மத்தியான மத்தாப்பில்
மலராத அந்த உணர்வு
அந்தி நேரத்து அழகில்
ஆர்ப்பரிக்காத அந்த உணர்வு

பொல்லாத இந்த இரவு வந்ததும்
எங்கிருந்து வருகிறது என்று கூடத்
தெரியாமல் ரகசியமாய்
வந்து விடுகிறதே

இதோ
இந்த இரவு வந்து விட்டது
நட்சத்திரங்கள் மின்னுகின்றன
நிலவும் எழுந்து விட்டது
அற்புதமான அந்த
உணர்வும்....




ந்


தே

.

.

.


வி


ட்





து

.

.

.

தூக்கம்!

http://jambazarjaggu.blogspot.com

வித்தியாசமான வலைப்பூ.. முயற்சித்து பாருங்கள்..

Tuesday, March 23, 2010

சிறந்த மாணாக்கன்

ராணுவத் தளவாடங்களுக்குப் போக
எஞ்சிய பணத்தில்
இளைத்திருந்த அவ்வகுப்பறை

கூலி ஆசிரியர்கள்

அவர்கள்
இன்றும்
என் மகனின் தலையில்
தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள்

காவியின் மீது
பச்சையின் மீது
வெள்ளையின் மீது
உறுதியேற்கச் சொல்கிறார்கள்

கேள்வியை
சுட்டும் விரலை
கூர்மையான நாக்கை
தொங்கும் வாலை
எதையும்
சக்கரத்தின் ஆரங்களுக்கு
நேர்படுத்துகிறார்கள்

தாய்நாட்டின் பொருட்டு
படையெடுப்பு
அத்துமீறலகள்
பொருளாதார உதவி
உள்நாட்டுப் போர்
குண்டுவெடிப்பு
ஆயுதம்
கூட்டுக் கொலை
நாடு கடத்தல்
அகதிகள்
நலத்திட்ட முகாம்கள்
உண்வுப் பொட்டலங்கள்
தமதற்ற மக்களையும் கொன்று போடும்
சனநாயகத்தைக் காப்பதின் பொருட்டு
தேசிய கீதத்தை
பிழையில்லாமல் பாடச் சொல்கிறார்கள்

நகரங்களைத் தகர்த்தெறி
சுவர்களை நொறுக்கு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை நிர்மூலமாக்கு
வனங்களை கருக்கு
நீங்கள் படைவீரர்கள்
அடிபணியுங்கள்

நகரங்களை சீரமை
சுவர்களை எழுப்பு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை மறுபடியும் உருவாக்கு
வனங்களைப் பெருக்கு
நீங்கள் பாட்டாளிகள்
அடிபணியுங்கள்

சீருடையில்
கட்டளைகள் பணிந்திருக்க
காரணங்கள் கேட்காதிருக்க
தண்டனைகள் அஞ்சியிருக்க
சலுகைகள் மகிழந்திருக்க
அரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்

இனி
நாடற்ற இனங்களின்
வளங்களைப் பறித்து
அவர்களது மதுவைப் பருகி
பெண்களைப் புணர்ந்து
சந்தையைப் பழக்கி
கடவுள்களை மாற்றி
எல்லைக்குத் தரகு பேசி
பிணை தேசத்தை உருவாக்கும்
நாளைய வல்லரசின்
குடிமகன்
சிறந்த தேசபக்தன்
என் எட்டுவயது மகன்.

- லீனா மணிமேகலை

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/

லீனாவின் எழுத்துக்கள் கொஞ்சம்(நிறையவே) அசைவ வகை.. அவரது வலைப்பூ இணைப்பிற்கு போகும் முன் யோசிக்கவும்..