Wednesday, July 7, 2010

வயிற்றினுள் ஒரு இதயம்

உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.

கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்
அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.

இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.

ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்
என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான்.

இந்திராவின் கிறுக்கல்கள்

Wednesday, June 9, 2010

காதல் போர்

விழிக்கும் மொழிக்குமான
போரில்
உதிர்கின்றன
ஊனமான கவிதைகள்...

- கிஷோர்

கவிவலம்

Thursday, March 25, 2010

ரொ...ம்ப ரொமான்டிக்காக ஒரு கவிதை!

அன்பே
என்ன ஆச்சர்யம்
இன்பமான இரவு வரும் போதெல்லாம்
அந்த இனிய உணர்வும்
கூடவே வருகிறதே

வைகறையின் வசந்தத்தில்
வராத அந்த உணர்வு
மத்தியான மத்தாப்பில்
மலராத அந்த உணர்வு
அந்தி நேரத்து அழகில்
ஆர்ப்பரிக்காத அந்த உணர்வு

பொல்லாத இந்த இரவு வந்ததும்
எங்கிருந்து வருகிறது என்று கூடத்
தெரியாமல் ரகசியமாய்
வந்து விடுகிறதே

இதோ
இந்த இரவு வந்து விட்டது
நட்சத்திரங்கள் மின்னுகின்றன
நிலவும் எழுந்து விட்டது
அற்புதமான அந்த
உணர்வும்....




ந்


தே

.

.

.


வி


ட்





து

.

.

.

தூக்கம்!

http://jambazarjaggu.blogspot.com

வித்தியாசமான வலைப்பூ.. முயற்சித்து பாருங்கள்..

Tuesday, March 23, 2010

சிறந்த மாணாக்கன்

ராணுவத் தளவாடங்களுக்குப் போக
எஞ்சிய பணத்தில்
இளைத்திருந்த அவ்வகுப்பறை

கூலி ஆசிரியர்கள்

அவர்கள்
இன்றும்
என் மகனின் தலையில்
தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள்

காவியின் மீது
பச்சையின் மீது
வெள்ளையின் மீது
உறுதியேற்கச் சொல்கிறார்கள்

கேள்வியை
சுட்டும் விரலை
கூர்மையான நாக்கை
தொங்கும் வாலை
எதையும்
சக்கரத்தின் ஆரங்களுக்கு
நேர்படுத்துகிறார்கள்

தாய்நாட்டின் பொருட்டு
படையெடுப்பு
அத்துமீறலகள்
பொருளாதார உதவி
உள்நாட்டுப் போர்
குண்டுவெடிப்பு
ஆயுதம்
கூட்டுக் கொலை
நாடு கடத்தல்
அகதிகள்
நலத்திட்ட முகாம்கள்
உண்வுப் பொட்டலங்கள்
தமதற்ற மக்களையும் கொன்று போடும்
சனநாயகத்தைக் காப்பதின் பொருட்டு
தேசிய கீதத்தை
பிழையில்லாமல் பாடச் சொல்கிறார்கள்

நகரங்களைத் தகர்த்தெறி
சுவர்களை நொறுக்கு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை நிர்மூலமாக்கு
வனங்களை கருக்கு
நீங்கள் படைவீரர்கள்
அடிபணியுங்கள்

நகரங்களை சீரமை
சுவர்களை எழுப்பு
ஆலயங்களை, தொழிற்சாலைகளை, பண்டகசாலைகளை
குடியிருப்புகளை மறுபடியும் உருவாக்கு
வனங்களைப் பெருக்கு
நீங்கள் பாட்டாளிகள்
அடிபணியுங்கள்

சீருடையில்
கட்டளைகள் பணிந்திருக்க
காரணங்கள் கேட்காதிருக்க
தண்டனைகள் அஞ்சியிருக்க
சலுகைகள் மகிழந்திருக்க
அரசியல் சாசனத்தில் தேர்ச்சி பெற வைக்கிறார்கள்

இனி
நாடற்ற இனங்களின்
வளங்களைப் பறித்து
அவர்களது மதுவைப் பருகி
பெண்களைப் புணர்ந்து
சந்தையைப் பழக்கி
கடவுள்களை மாற்றி
எல்லைக்குத் தரகு பேசி
பிணை தேசத்தை உருவாக்கும்
நாளைய வல்லரசின்
குடிமகன்
சிறந்த தேசபக்தன்
என் எட்டுவயது மகன்.

- லீனா மணிமேகலை

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/

லீனாவின் எழுத்துக்கள் கொஞ்சம்(நிறையவே) அசைவ வகை.. அவரது வலைப்பூ இணைப்பிற்கு போகும் முன் யோசிக்கவும்..

Friday, August 7, 2009

நிறங்கள் கசியும் பூக்கள்

நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள்
அருகில் சென்று வாசம் நுகர்வதை
அவை ஆட்சேபிப்பதில்லை

தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை
கொஞ்சமேனும் மறுப்பதில்லை

பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது

வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
எளிதானதாக இருக்கிறது

சூரியன்
எப்பொழுதும் எங்கிருந்தோ
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...

- லக்‌ஷ்மி சாகம்பரி

http://sahambari.blogspot.com/

Tuesday, August 4, 2009

அந்நிய நாட்டில் அகதியா

சொர்கமே என்றாலும் நம்மூரை
போல வருமா ...அதற்காய்
அயலகத்தில் வாழும் வரை
நரகத்தில் வாழ்வதாகுமா

உண்ணாத குழந்தைக்காய்
மனைவியை திட்டுவாய்
உணவு பிடிக்கவில்லையென
தொலைபேசியில் புலம்புவாய்

தமிழை பேசுபவன் தமிழன்
ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்

சொத்து தகராறில் தம்பி
வெட்டி கொலைக்கும்
எல்லைத் தகராறில் வீரர்
சுட்டுக் கொலைக்கும்
வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
வித்தியாசம் மனத்தின் சுற்றளவே

ஈழத்தில் உன்னினம் எரியும்
பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
எரிக்க கண்ட உலகவ்வினம்

நாடென்பது நிர்வாகத்திற்காய்
பிரித்ததாகும்
மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
உரித்தாகும்

சுவாசிக்க காற்றளிக்கும்
கண்டமெல்லாம் என் கண்டமே
நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
கலக்கு மென் பிண்டமே

- செல்வேந்திரன்

http://www.enpadaipugal.blogspot.com/

Sunday, May 10, 2009

எங்கே எங்கள் தலைவன்!!!

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.


நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.

ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா?

படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Literacy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.

ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம் . கேட்டா , வாக்காளர் அடையாள அட்டை இல்லை , ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம்.. கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம் .

வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.

வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம் .

எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி , ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.

ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க?

அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம். அவ்வளவுதான்.

படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.

அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது .

நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான் ...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )