Wednesday, February 4, 2009

தூக்கம் விற்ற காசுகள்..

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை ..
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை ..
இதோ.. அயல் தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ் .. !

விசாரிப்புகளோடும் ..
விசா அரிப்புகளோடும்... வருகின்ற
கடிதங்களை நினைத்து .. நினைத்து..
பரிதாபப்படத்தான் முடிகிறது..

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால் ..
வாசனைகள் இருக்கலாம்..
ஆனால் ... வாழ்க்கையில் .. ?

தூக்கம் விற்ற காசில்தான்..
துக்கம் அழிக்கின்றோம் ..
ஏக்கம் என்ற நிலையிலேயே ..
இளமை கழிக்கின்றோம் ..

எங்களின் .. நிலாக்கால
நினைவுகளையெல்லாம் ..
ஒரு விமான பயணத்தினூடே
விற்று விட்டு.. .

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே ..
கடல் தாண்டி வந்திருக்கிறோம் ..

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன ..
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன..

பழகிய நாட்கள் ..
பழகிய வீதிகள்..
கல்லூரி நாட்கள் ...
தினமும் ..
ஒரு இரவு நேர கனவுக்குள்..
வந்து .. வந்து ..
காணாமல் போய்விடுகிறது..

நண்பர்களோடு .. ஆற்றில் . .
விறால் பாய்ச்சல்..
மாட்டுவண்டி பயணம்..
நோன்பு நேரத்துக் கஞ்சி ..
பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் . .
ஒவ்வொரு
ஞாயிற்றுக் கிழமையாய் எதிர்பார்த்து
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலகக்கோப்பை கிரிக்கெட்

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம் ..
விசாவும் .. பாஸ்போர்ட்டும் வந்து ..
விழிகளை நனைத்துவிடுகிறது . ..

எவ்வளவு சம்பாதித்தும் .. என்ன ?
நாங்கள் அயல் தேசத்து . .
ஏழைகள் தான். .!

காற்றிலும்.. கடிதத்திலும்..
வருகின்ற சொந்தங்களின் ..
மரணச் செய்திகளிலெல்லாம்..
அரபிக்கடல் மட்டும்தான் ..
ஆறுதல் தருகிறது .. !

ஆம்.. !
இதயம் .. தாண்டி..
பழகியவர்களெல்லாம்..
கடலைத்தாண்டி ..
கண்ணீரிலேயே..
கரைந்துவிடுகிறார்கள் .. !

'இறுதி நாள்' நம்பிக்கையில் தான்..
இதயம் சமாதானப்படுகிறது...

இருப்பையும்.. இழப்பையும்..
கணக்கிட்டுப் பார்த்தால் ..
எஞ்சி நிற்பது .. இழப்பு மட்டும் தான்.. !

பெற்ற குழந்தையின் ..
முதல் ஸ்பரிசம்.. முதல் பேச்சு..
முதல் பார்வை.. முதல் கழிவு..
இவற்றின் பாக்கியத்தை ..
தினாரும் - திர்ஹமும்..
தந்துவிடுமா..?

கிள்ளச்சொல்லி ..
குழந்தை அழும் சப்தத்தை ..
தொலைபேசியில் கேட்கிறோம்.. !

கிள்ளாமலேயே ..
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்..
யாருக்குக் கேட்குமோ.. ?

ஒவ்வொருமுறை ..
ஊருக்கு வரும்பொழுதும் ..
பெற்ற குழந்தையின் ..
வித்தியாச பார்வை ..
நெருங்கியவர்களின் .. திடீர்மறைவு..

இப்படி ..
புதிய முகங்களின் . .
எதிர் நோக்குதலையும்..
பழைய முகங்களின் ..
மறைதலையும் கண்டு..

மீண்டும்..
அயல் தேசம் செல்லமறுத்து..
அடம் பிடிக்கும்.. மனசிடம்..

தங்கையின் திருமணமும்..
தந்தையின் கடனும்..
பொருளாதாரமும் வந்து ..
சமாதானம் சொல்லி..
அனுப்பி விடுகிறது.. .
மீண்டும்.. . அயல் தேசத்திற்கு.. !

- ரகசிவ் ஞானியார், துபாய்

http://www.orkut.com/Main#CommMsgs.aspx?cmm=70917&tid=5299031200039063266

காணவில்லை!

தேசியக் கொடியில்
திடீரெனக் காணவில்லை அசோகச் சக்கரம்
தேடிச் சென்றால்
ஈழத் தமிழர்களின் கழுத்தின் மீது!
காங்கிரஸ் கொடியில்
ராட்டை தொலைந்து வெகுநாட்களாயிற்று
ரத்தக்கறை படிந்த கை அந்த இடத்தில்!
ராஜீவ் போனாலென்ன
மனைவி கை, மகன் கை, மகள் கை!
மன்மோகன் சிங்குக்கு
அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப்
பெருவியப்பு
இந்தியாவில் துடிப்பதன் எதிரொலி இலங்கையில்!
பழைய "மனோகரா" வசனப் புத்தகத்துடன்
உச்ச நீதிமன்றத்தின் பின்னே ஒருவர்
மஞ்சள் துண்டால் வியர்வை துடைத்தபடி!
காற்றுப் புரட்டிய பக்கத்தில்
"புறநானூற்றுப் புகழை மறைக்க வந்த
புழுதிக் காற்றே!"
மானம், வெட்கம், சூடு, சொரணை
மருந்துக்குக்கூடக் காணோமே!
மனைவியர், மக்கள், பேரன், பேத்திகள்,
பதவிகள், சொத்து, சுகம், நீடிக்கும் ஆயுள்;
முத்துக்குமார் செத்தாலென்ன,
பள்ளபட்டி ரவி செத்தாலென்ன,
ஈழத்தமிழனென்ன
ஈரோட்டுத் தமிழன் செத்தாலும்
இறங்கற்பா எழுத முடியாது;
பிடுங்கிச் சென்றுவிட்டாராம் பேனாவை
பிரணாப் முகர்ஜி!

- தெ. சுந்தரமகாலிங்கம்

http://www.inaiyavuli.blogspot.com/