Friday, August 7, 2009

நிறங்கள் கசியும் பூக்கள்

நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள்
அருகில் சென்று வாசம் நுகர்வதை
அவை ஆட்சேபிப்பதில்லை

தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை
கொஞ்சமேனும் மறுப்பதில்லை

பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது

வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
எளிதானதாக இருக்கிறது

சூரியன்
எப்பொழுதும் எங்கிருந்தோ
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...

- லக்‌ஷ்மி சாகம்பரி

http://sahambari.blogspot.com/

Tuesday, August 4, 2009

அந்நிய நாட்டில் அகதியா

சொர்கமே என்றாலும் நம்மூரை
போல வருமா ...அதற்காய்
அயலகத்தில் வாழும் வரை
நரகத்தில் வாழ்வதாகுமா

உண்ணாத குழந்தைக்காய்
மனைவியை திட்டுவாய்
உணவு பிடிக்கவில்லையென
தொலைபேசியில் புலம்புவாய்

தமிழை பேசுபவன் தமிழன்
ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்

சொத்து தகராறில் தம்பி
வெட்டி கொலைக்கும்
எல்லைத் தகராறில் வீரர்
சுட்டுக் கொலைக்கும்
வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
வித்தியாசம் மனத்தின் சுற்றளவே

ஈழத்தில் உன்னினம் எரியும்
பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
எரிக்க கண்ட உலகவ்வினம்

நாடென்பது நிர்வாகத்திற்காய்
பிரித்ததாகும்
மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
உரித்தாகும்

சுவாசிக்க காற்றளிக்கும்
கண்டமெல்லாம் என் கண்டமே
நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
கலக்கு மென் பிண்டமே

- செல்வேந்திரன்

http://www.enpadaipugal.blogspot.com/