Wednesday, July 7, 2010

வயிற்றினுள் ஒரு இதயம்

உருவானது உறுதியானதும்
துவங்கிவிட்டது..
உன்மீதான என் கற்பனைகள்.
உடலைக் கருவாக்கி, உதிரத்தை உணவாக்கி
உன்னை உலகிற்கும், உலகை உனக்கும்
அறிமுகப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தேன்.

உனது பேரிலிருந்து, பெரும் எதிர்காலம் வரை
விரிவடைந்தது எனது சிந்தனைகள்..
உன் ஒவ்வொரு அசைவினையும்
அனுபவிக்க ஆயத்தமானேன்..
உணவு முதல் உறக்கம் வரை
உனக்கேற்றதைப் பழகிக்கொண்டேன்.
உனக்கான பொருட்களை சேகரிப்பதே
என் முழு வேலையாகிப் போனது..
இனிய இசையும் எனது உரையாடல்களையும்
எப்போதும் உனக்குப் பரிசளித்தேன்.

கால்களின் வீக்கம் குறைய பார்லி காஞ்சி குடி
- பாட்டி சொன்னாள்
சூடு தணிக்க விளக்கெண்ணை தடவு
- அம்மா சொன்னாள்
குடல் சுற்றாமல் இருக்க உறங்கும் பயிற்சிகொள்
- அக்கா சொன்னாள்
குனிந்து நிமிர வீட்டுப்பணி செய்
- அத்தை சொன்னாள்
இவற்றோடு நடை பயிற்சியும் செய்
- தோழி சொன்னாள்
மாத்திரைகளை தவறாமல் சாப்பிடு
- இது மருத்துவர்
அனைத்தும் செய்தேன் உன் ஜனனம் சுகப்பட..
குமட்டல்களும் மயக்கங்களும்
சகித்துக்கொண்டேன் - உன் வளர்ச்சிக்காக.

நிறைமாத வளையல்களின் ஓசை
உனக்குக் கேட்டது போலும்..
உன் பாதங்களை என்னால் உணர முடிந்தது.

இருந்த இடம் சலித்துவிட்டது போல..
நீ முண்டத் தொடங்கினாய்..
கொஞ்சம் கொஞ்சமாக
முதுகுத்தண்டில் ஆரம்பித்த வலி
உடல் நரம்புகளைத் தொற்றியது..
வலிகளைப் பொறுத்துக்கொண்டேன்..
அது உனக்கான வழி என்பதால்.

ஏனோ உனக்கும் எனக்கும் பெரும் போராட்டமே நடந்தது..
இருவருமே அவதிப்பட்டோம்..
உனது பிஞ்சுக் கன்னங்களில்
என் முதல் முத்தம் பதிவதற்கு ஏங்கியிருந்தேன்..
என்னதான் உன்னை வெளியே தள்ளினாலும்
எனக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.

அரைநாள் அவதிக்குப்பின்
அது என் காதில் விழுந்தது..
"பெரிய உசுரையாவது காப்பாத்துங்க டாக்டர்"
அப்போது காணாமல் போனது நீ மட்டுமல்ல..
என் சந்தோசங்களும் தான்.

இந்திராவின் கிறுக்கல்கள்

No comments: